டெல்லி கலவரம் அரசியல் ரீதியாக தூண்டி விடப்பட்ட ஒன்று. அதை மறைத்துவிட்டு, ஏதோ உளவுத்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது போல ரஜினி பூசி மொழுகிறார் என விமுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தபோது டெல்லியில் நடைபெற்ற வன்முறை கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் என கூறினார். மேலும் டெல்லி கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும் என்றும், இந்த வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

மத்திய அரசை எதிர்த்துப் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு தரப்பினர் ரஜினியின் கருத்தை வரவேற்றனர். அதேசமயத்தில், மத்திய அரசை கண்டிப்பது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் கருத்து குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி. ரவிக்குமார்;- டெல்லியில் நடைபெறும் பிரச்சனைகளுக்குக் காரணம் உளவுத்துறை தோல்வி என ரஜினி சொல்கிறார். அங்கே ஏற்பட்டுள்ள பிரச்சனை, திட்டமிட்ட முறையில் அரசியல் ரீதியாக தூண்டி விடப்பட்ட ஒன்று. அதை மறைத்துவிட்டு, ஏதோ உளவுத்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது போல சுருக்குகிறார். இது பாஜகவை காப்பாற்றுவதற்காகவே ரஜினி இந்த கருத்தை கூறியுள்ளார் என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.