தற்போது அந்த போஸ்ட் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அடைவது பெரும் பிரச்னையாக உருவாகிறது. டெல்லி எல்லை சுற்றியுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது, டெல்லியில் வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்றவற்றால் காற்று வேகமாக மாசுடைந்து வருகிறது. 

இதனை தடுக்க டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தில் உள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லியில் இன்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காற்று அங்கு எந்த அளவுக்கு மோசமாக மாசு அடைந்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். 

மாசு அடைந்த காற்றை சுவாசிப்பதும், ஒரு நாளில் பல சிகரெட்டுக்களை புகைப்பதும் ஒன்றுதான் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி காற்று மாசு பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் தனது டிவிட்டரில் ஒரு படத்தை போஸ்ட் செய்துள்ளது. 

சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு இருக்கும் புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்ற வாசகத்தை சுவாசிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என சிறிது மாற்றி டெல்லி படத்துடன் போஸ்ட் செய்துள்ளது. 

அதன்கீழ், டெல்லியில் மீண்டும் ஒருமுறை மாசு அவசர நிலையை எட்டியுள்ளது மற்றும் தலைநகர் முழுவதும் பள்ளிகள் மூடவைத்துள்ளன. இந்த மோசமான சுகாதார அவசர சூழ்நிலையிலும் மீண்டும் ஒரு முறை அரசு அமைதியாகவே இருக்கிறது என பதிவு செய்து இருந்தது. இதனை ஏராளமான டிவிட்டர்வாசிகள் லைக் செய்துள்ளனர்.