டெல்லியில் மக்கள் யாருக்காகவும் எதற்காகவும் அஞ்ச வேண்டாம்,  உங்கள்  பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம் என டெல்லி காவல் இணை ஆணையர் பேசியிருப்பது  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . மக்கள் அச்சமின்றி வெளியில் வரலாம் என்று அவர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது கலவர பீதியில் உள்ள மக்கள் மத்தியில் காவல் துறை அதிகாரியாக அவர் பேசியிருப்பது  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .  

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு  ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது .  இதில் தெற்கு டெல்லியில்  ஜாப்ராபாத் ,  , சீலம்பூர் ,  சாம்பார்க்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் வெடித்தது .  கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் கலவரத்தில்  பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

 

கண்ணில் பட்டதையெல்லாம் வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தி வருகின்றனர்.  இந்த கலவரத்தில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .  இந்த கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் ,  உளவுத்துறையின் படுதோல்வியை கலவரத்திற்கு காரணம் ,  போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை என பல்வேறு  விமர்சனங்கள் எழுந்துள்ளன.   இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் துணை ராணுவத்தினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர் .  இதில் சாம்பார்க் பகுதியில் கொடியை அணிவகுப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர், ஓ.பி மிஸ்ரா ,  ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் உரையாற்றினார் அப்போது கூறிய அவர் ,  மளிகை ,  மருத்துவம் மற்றும் உள்ளிட்ட  அடிப்படை பொருட்கள்  விற்பனை செய்யும் கடைகள் தாராளமாக திறக்கலாம் . 

மக்கள் தைரியமாக வெளியில் வந்து பொருட்களை வாங்கலாம் ,  மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் ,   பாதுகாப்பிற்காக நாங்கள் (காவல்துறை) இருக்கிறோம் .  உங்கள் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்கிறது.   ஆனால் யாரும் குழுக்களாக நிற்க வேண்டாம் ,  இளைஞர்கள் அதை செய்ய வேண்டாம் . உடனே  மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் .  வேலைக்கு செல்பவர்கள் செல்லலாம் ,  யாரும் எதற்காகவும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை .  உங்களுக்கு ஏதாவது பயம் இருப்பின் எங்களிடம் வந்து அதை தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார் .   வன்முறையால் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் உள்ள  கடைகள் தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது . இந்நிலையில்  காவல் துறை  துணை ஆணையரின் பேச்சு கலவரம் பாதித்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .