delhi police arrival in chennai cancelled

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் களம் இறங்கின. இரு தரப்பும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

ஆனால், தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. பின்னர், இரு தரப்பினருக்கும் தனித்தனி சின்னத்தை வழங்கியது.

இதையொட்டி இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் இரு தரப்பினரும் இறங்கினர். அதில், கட்சி அணியினர் அதிகமாக ஓ.பி.எஸ் பக்கம் இருப்பதால், லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை ஓ.பி.எஸ். அணியினர் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர். இதனால், இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ். அணிக்கு கிடைக்கும் என்ற கருத்து எழுந்தது.

இதைதொடர்ந்து, நேற்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராக இருந்தனர்.

இந்த பிரச்சனையில் திடீர் திருப்பமாக நேற்று காலை சுகேஷ் சந்திர சேகர் என்கிற நபர், டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த அவரது அறையில் இருந்து ரூ.1.3 கோடி மதிப்புள்ள புத்தம் புது 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் பிடிப்பட்டன. சுகேஷ் சந்திர சேகரின் செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், ஹைடெக் மோசடி பேர்வழி. யாரையும், எளிதில் நம்ப வைத்து மிகப் பெரிய அளவில் கோடிகளில் மோசடி செய்யும் ஆசாமி.

சுகாஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், அறையில் கைப்பற்றப்பட்ட பணம், அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்காக கொடுத்த முன் பணம் என தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் டிடிவி.தினகரனையும் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரையும் விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்தனர்.

தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சஞ்சய் சரவத் தலைமையில் போலீசார் சென்னை வர இருந்தனர். விசாரணையா அல்லது கைதா என்ற பரபரப்பான ஒரு சூழ்நிலையில், டெல்லி போலீசாரின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது, கைது செய்யப்பட்ட சுகேஷை, விசாரணைக்காக டெல்லி போலீசார் 8 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளனர். அவரிடம் நடத்தும் விசாரணையில், கூடுதலாக பல விவரங்கள் கிடைக்கும் என்பதால், கூடுதல் விபரங்களுடன் சென்னைக்கு வரலாம் என டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு எடுத்துள்ளனர். இதனால், தற்காலிகமாக சென்னை வரும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் டெல்லி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் நேற்றே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டதாகவும், சென்னையில் தங்கி இங்குள்ள நிலவரங்களை அவர் கண்காணித்து வருவதாகவும், அதில் பெறப்படும் விஷயங்களை அவ்வப்போது டெல்லி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வருவதாகவும் டெல்லி போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி போலீசாரின் வருகை ரத்து என்பது தற்காலிகமானதே. இதில் சமரசத்துக்கு இடம் இல்லை. கட்டாயம் கடுமையான நடவடிக்கை இருக்கும். கூடுதல் தகவல்களுடன் அந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொறுத்திருந்து பாருங்கள் என டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.