எம்.பி. பதவியை தொடர்ந்து டெல்லியில் கிடைத்த மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் அன்புமணியை குதூகலமாக்கியது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக படுதோல்வி அடைந்தது. இதனால் தேர்தலுக்கு முன்னர் செய்து கொண்ட உடன்பாட்டின் படி அன்புமணிக்கு அதிமுக ராஜ்யசபா எம்பி பதவியை கொடுக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து பாமக தரப்பு அதிமுகவிடம் எதுவும் கேட்கவில்லை. அதிமுகவும் அமைதியாகவே இருந்தது- பின்னர் ஒரு கட்டத்தில் ஒப்பந்தப்படி பாமகவுக்கு எம்பி பதவி வழங்கப்படும் என்று அறிவித்த அதிமுக தற்போது அன்புமணியை எம்பியாகவும் ஆக்கிவிட்டது. 

இப்படி தேர்தலில் தோற்ற நிலையிலும் இன்ப அதிர்ச்சியாக அதிமுக சொன்னபடியே நடந்து கொண்டதால் அன்புமணி எம்பியாகிவிட்டார். இது ஒரு புறம் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது அன்புமணிக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. எதற்கெடுத்தாலும் நியாயம் பேசும் பாமகவிற்கு மிகப்பெரிய தர்மச ங்கடத்தை ஏற்படுத்துவது அன்புமணி மீதான ஊழல் வழக்கு தான். அதாவது அவர் 2004 முதல் 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது ஏற்பட்ட சிக்கல் தான் அது. 

அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அன்புமணி அனுமதி கொடுத்து  கோடி கோடியாக லஞ்சம் வாங்கிவிட்டார் என்பது தான் அந்த வழக்கு. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த விவகாரத்தில் அன்புமணி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் 2015ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரி ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அன்புமணி மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தான் நேற்று ஒரு உத்தரவு வந்துள்ளது. அதன்படி 2015ம் ஆண்டு அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

இதன் மூலம் அன்புமணி மீண்டும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே சமயம் புதிதாக குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது அன்புமணி பாஜக கூட்டணியில் உள்ளார். மத்தியில் ஆள்வது பாஜக தான். எனவே சிபிஐ புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்யுமா? அல்லது இந்த வழக்கை கிடப்பில் போட்டுவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

அப்படியே குற்றச்சாட்டை பதிவு செய்தாலும் அது எந்த அளவிற்கு அன்புமணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இனி ஊழல் வழக்கை கூறி தன்னை விமர்சனம் செய்ய முடியாது என்று அன்புமணி குதூகலத்தில் உள்ளார்.