டெல்லி துணைநிலை ஆளுநரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த யார் அனுமதி வழங்கியது என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கேள்வி எழுப்பியது. 

கடந்த 3 மாதங்களுக்கு முன், டெல்லி அரசின் தலைமை செயலாளரை ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவித ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என டெல்லி முதல்வரும் அமைச்சர்களும் குற்றம்சாட்டுகின்றனர். 

இதனால் மக்கள் பணி பாதிக்கப்படுவதால், ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல், துணைநிலை ஆளுநர் பைஜால், அவர்களை தூண்டிவிடுவதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டுகிறார். மேலும் மத்திய பாஜக அரசும் அவரகளை தூண்டிவிடுவதாக கேஜ்ரிவால் குற்றம்சாட்டுகிறார். 

எனவே ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முடித்து வைக்க வலியுறுத்தி டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கேஜ்ரிவால் கடிதம் எழுதினார். ஆனால் அந்த கடிதத்திற்கு மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக உண்ணாவிரதமும் இருந்துவருகின்றனர். 

டெல்லி முதல்வரின் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் வேலைநிறுத்தம் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. நீதிபதி ஏ.கே.சாவ்லா மற்றும் நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

அப்போது, டெல்லி துணைநிலை ஆளுநரின் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான அனுமதியை துணை நிலை ஆளுநர் வழங்கினாரா? போராட்டம் என்றால் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு வெளியே தானே நடத்த வேண்டும். அலுவலகத்திற்குள் எப்படி போராட்டம் நடத்தலாம்? யார் அனுமதி வழங்கியது? என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.