அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் தொடர்பான வழக்கை 4 வாரங்களில் முடிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் கட்சியிலிருந்து ஓபிஎஸ் அணி தனியாக பிரிந்தது. ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு, கட்சி பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தையும் இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியையும் நியமித்து, இவர்கள் தான் வழிநடத்துவார்கள் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதிமுக.வின் அடிப்படை சட்டவிதியை மாற்றி இப்படி நியமனங்களை பொதுக்குழு செய்ய முடியுமா? என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த மாற்றத்தை அங்கீகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எழுதிய கடிதம், பொதுக்குழு தீர்மானம் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அமைப்பு விதிகள் தொடர்பான பகுதியில் வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்தோ, அதிமுக தரப்பில் இருந்தோ அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. 

இதற்கிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, அதிமுகவின் விதிகளில் இருந்து பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது செல்லாது எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அதிமுக சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கே.சி.பழனிசாமியின் வழக்கை விசாரித்து 4 வாரங்களில் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு  உத்தரவிட்டுள்ளது.