ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் கே.சி.பழனிசாமி அதிமுகவுக்கு பெரும் தலைலியாக இருந்து வருகிறார். 

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி மொத்தம் 1700-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெறப்பட்டன. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 

அந்த மனுவில் அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது, என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார். 

ஆனால், தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் பீதி அடைந்துள்ளனர்.