கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது,  இந்நிலையில் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்  சாக்கேட்டில்  உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். கொரோனாவின் கட்டுப்பாட்டில் தலைநகர் டெல்லி இருந்துவருகிறது, இங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுவரை 49,979 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,969 ஆக உயர்ந்துள்ளது, 21,341 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று தடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

அக்கூட்டத்திற்கு பின்னர் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, இதனையடுத்து அவர் உடனடியாக ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு முதல் பரிசோதனையில் பாதிப்பு  உறுதியாகவில்லை, ஆனால் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 24 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மருத்துமனையில் கண்காணிப்பில் இருந்துவருகிறார், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்யேந்திர ஜெயினுக்கு  பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர், இதற்காக அவர் சாக்கேட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். வெள்ளிக்கிழமை சத்தியேந்திர ஜெயின் உடல்நிலை மோசமடைந்தது, இதனால் அவருக்கு ஆக்சிஜன் ஆதரவு கொடுக்க வேண்டியிருந்தது மருத்துவர்களின் தகவலின்படி இன்னும் கூட ஜெயிலுக்கு சுவாசிப்பதில் சிரமம் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு காய்ச்சலும் தொடர்ந்து உள்ளது, அவருக்கு நிமோனியா அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது சத்தியேந்திர ஜெயினுக்கு மாற்றாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு சுகாதார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார், ஜெயின் மருத்துவமனையில் உள்ளதால் அவரது அனைத்து துறைகளின் பொறுப்பும் துணை முதல்வர் சிசோடியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.