நாட்டின் தலைநகர் டெல்லியில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால், அடுத்த ஒன்றரை மாதங்களில் சுமார் 60,000 covid-19 படுக்கைகள் தயார்படுத்தும் நடவடிக்கையில் டெல்லி அரசு தீவிரம் காட்டி வருகிறது. டெல்லியில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது, இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த கேள்விக்கு துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா சமூக பரவல் ஏற்படவில்லை என பதிலளித்துள்ளார். மேலும், தலைநகர்  டெல்லியில் கொரோனா பாதிப்பு சமூகம் பரவல் நிலைக்கு இன்னும் செல்லவில்லை என்று மத்திய சிறப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் மொத்த கோவிட்-19 பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை  ஜூலை 31-க்குள் 5.5 லட்சமாக உயரும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 80,000 படுக்கைகள் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லியில் தற்போது  20,000 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 10 ஆயிரம் படுக்கைகள் டெல்லி அரசு நடத்தும் மருத்துவமனைகளில் உள்ளன என்றும் , டெல்லியில் மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் கூடுதலாக பத்தாயிரம் எண்ணிக்கையிலான படுக்கைகள் உள்ளது எனக் கூறியுள்ளார்,  இந்நிலையில் மொத்தம் 80 ஆயிரம் படுக்கைகள் அரசுக்கு தேவைப்படுகிறது.  ஜூன் 9 நிலவரப்படி டெல்லியில் வைரஸ் பாதிப்பு 29 ஆயிரத்து 943 ஆக இருந்தது, அதாவது ஜூன்-1 முதல் 9ஆம் தேதி வரை கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் வைரஸ் தொற்று எந்த அளவிற்கு உயர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். 

இந்நிலையில் டெல்லி அரசாங்கத்தின் கணிப்புப்படி, ஜூன்-15ஆம்  தேதிக்குள் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 44 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது, எனவே மேலும்  சிகிச்சை அளிக்க 6 ஆயிரத்து 600 படுக்கைகள் தேவைப்படும், இதன் எண்ணிக்கை ஜூன் 30க்குள் ஒரு லட்சமாக உயரும் என்று டெல்லி அரசு கணித்துள்ளது. எனவே நகரத்திற்கு ஜூன் 30-க்குள் 15,000 படுக்கைகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே ஜூலை 15ஆம்  தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை 2.25 லட்சமாக உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே 33 ஆயிரம் படுக்கைகள் அப்போது கூடுதலாக தேவைப்படும் என்றும், ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5.5  லட்சமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான பாதிப்பை கையால சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கூடுதலாக 80,000 படுக்கைகள் தேவைப்படும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. 

அரசின் தற்போதைய கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், ஜூலை 31 தேதிவாக்கில் 5.5 லட்சம் பேர் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது என்றும், புதிதாக 60,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், அதை வெறும் 52 நாட்களில் செய்து முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் டெல்லி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது டெல்லி அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது, ஏனெனில் புதிதாக உருவாகப் போகும்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அதிக அளவிலான சுகாதார ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். தற்போதுள்ள சுகாதார ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதுதவிர புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மிகப்பெரிய சவாலை டெல்லி அரசு எதிர்கொண்டுள்ளது. போதுமான ஆக்சிஜன் பொருட்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஐசியு படுக்கைகளையும் ஏற்பாடு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழல்கள் டெல்லியை மட்டுமல்லாது நாட்டையே கவலை அடையச் செய்துள்ளது குறிப்பிடதக்கது.