நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம் சமூக ஊடங்களில் கிளம்பும் எதிர்ப்புகளால் டெல்லி  தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27ம் தேதி தமிழகம் வந்திருந்தார். வழக்கம்போல் மோடி எதிர்ப்பாளர்கள் ‘#Gobackmodi'யை உலக அளவில் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆக்கினார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி தமிழகம் வந்தபோதும், இதேபோல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் இப்படி நடப்பதால், டெல்லி தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எதிர்ப்பாளர்களின் இந்த நடவடிக்கையை முறியடிக்க மாநில பாஜகவால் எதுவும் செய்ய முடியாததும் அதிருப்திக்கு காரணம். எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மிகப் பெரிய திட்டம். அதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மக்களை திரட்டவில்லை என்று தமிழக பாஜக மீது டெல்லி தலைமை கோபம் காட்டியதாக அக்கட்சியின் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை என்றால் என்ன? மக்களுக்கு அது எவ்வளவு பயன் அளிக்கக்கூடியது போன்ற விஷயங்களை மாநில பாஜகவினர் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று டெல்லியில் உள்ள சில தலைவர்கள்  அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதேபோல தமிழகத்தில் சமூக ஊடகங்களில் மோடியைப் பற்றி எதிர்மறையாக டிரெண்ட் செய்யப்படும் விஷயம், பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் டெல்லி தலைமையிடம் சில தலைவர்கள் எடுத்துச் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாநில பாஜக மீது டெல்லி தலைமை கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

டெல்லி தலைமையில் கோபத்தைப் புரிந்து கொண்ட மாநில பாஜகவினர், இனி மோடி எதிர்ப்பாளர்களுக்கு கடும் பதிலடி தர முடிவு செய்துவிட்டார்கள். அதன் வெளிப்பாடகவே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்திய வைகோவுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர்கள் பதிலடி தரத் தொடங்கியுள்ளனர். இது சமூக ஊடங்களிலும் எதிரொலிக்கும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.