தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சருடைய மரணத்தில் உள்ள மர்மத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, நாட்டு மக்கள்முன் நிறுத்தப்போகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்;- திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது, அ.தி.மு.க.  அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி இருக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் முடிவு செய்து, அந்தக் கட்சியை வெற்றிபெற வைத்தீர்கள். கப்பெரிய வெற்றி அல்ல, 1.1% வித்தியாசத்தில்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஜெயலலிதா முதலமைச்சராகப பொறுப்பேற்று, அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்குப் பிறகு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. இன்றும் மர்மமாகவே இருக்கிறது. சாதாரணமாக ஒருவர் இறந்து விட்டால் கூட, அந்த மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கிறோம்.

ஆனால் இந்த நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள். அவர் எப்படி இறந்தார் என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது. அவர்கள் இறந்து 4 வருடங்கள் ஆகி விட்டன. அதற்கு விசாரணைக் கமிஷன் அமைத்தார்கள். விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று தி.மு.க.வில் இருப்பவர்கள் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான். ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக் கமிஷன் 8 முறை பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவர் செல்லவில்லை. ஆனால் இன்றைக்கும் அ.தி.மு.க.வில் இருக்கும் பழனிசாமியிலிருந்து, ஓ.பன்னீர்செல்வத்திலிருந்து, அமைச்சர்களிருந்து, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் வரை அனைவரும் பாக்கெட்டில் அந்த அம்மா படத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அலுவலகங்களில் அம்மா படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்த அம்மையார் மரணத்தை கூட இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் வரப்போகின்றது. ஆட்சி மாற்றம் வந்தவுடன், முதல் வேலையாக, தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சருடைய மரணத்தில் உள்ள மர்மத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, நாட்டு மக்கள்முன் நிறுத்தப்போகிறேன். அவ்வாறு நிறுத்தும் பணியை இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதனை அ.தி.மு.க. தோழர்களும் நிச்சயமாக வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தெய்வமாக, அம்மாவாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு தலைவர் அவர், ஒரு முதலமைச்சர் அவர்.

 முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் - அவரை எடப்பாடி என்று சொல்வதில்லை. ஏன் என்றால், எடப்பாடி என்று ஒரு ஊர் இருக்கிறது. நான் அண்மையில் அந்த எடப்பாடிக்குச் சென்றிருந்தேன். அங்கு இதேபோல மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினேன். அப்போது அங்கிருந்த சில தாய்மார்கள் என்னிடத்தில், “ஐயா, பழனிச்சாமி என்று சொல்லுங்கள். எடப்பாடி என்று சொல்லாதீர்கள். எடப்பாடி என்று சொல்வது எங்களுக்குக் கேவலமாக இருக்கிறது“ என்று சொன்னார்கள். அதிலிருந்து, எடப்பாடி என்று சொல்வது இல்லை. பழனிசாமி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அந்த முதலமைச்சர் பழனிசாமி, ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் செல்லும் பழனிசாமி, தான் ஒரு முதலமைச்சர் என்பதையே மறந்து, மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மறந்து, ‘நீ, வா, போ, உனக்கு என்ன தெரியும், உனக்கு என்ன புரியும், யார் நீ, என்ன சொல்கிறாய்’ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் ஒரு முதலமைச்சராக இருந்து வருகிறார். பழனிசாமியைப் பொறுத்தவரை, தரம் இல்லாமல் இருக்கலாம். தரங்கெட்டுப்போனவராக இருக்கலாம். அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவி ஒரு தரம் மிக்க பதவி. அதை மறந்து விடக் கூடாது. அந்தத் தரம் மிக்க பதவியை வைத்துக் கொண்டு, அவர் இவ்வாறு ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, விமர்சனம் செய்வது என்பது அவருடைய பதவிக்கு அழகல்ல. அவரைப்போன்று என்னாலும் பேசமுடியும். அவரைப்போல இங்கு இருக்கும் நம் கழகத் தோழர்களை அழைத்துப் பேசச் சொன்னால் பல மடங்கு பேசுவார்கள். ஆனால் நாங்கள் நிச்சயமாகப் பேச மாட்டோம். கலைஞர் அவர்கள் எங்களுக்கு அவ்வாறு கற்பித்துத் தரவில்லை. ஜனநாயக முறைப்படிதான் பேச வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உதாரணமாக ஒன்றைக் கூறினார்.

ஒரு யானைப் பாகன் யானையைக் குளத்தில் குளிப்பாட்டி விட்டு, அழைத்து வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு சாக்கடையில் புரண்ட பன்றி எதிரில் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு எதிரில் வந்த பன்றியை யானை பார்க்கிறது. பார்த்தவுடன் அந்த யானை கொஞ்சம் ஒதுங்குகிறது. அப்போது அந்தப் பன்றி, யானையைப் பார்த்து, “பயந்து ஒதுங்குகிறது” என்று சொன்னது. அவ்வாறு யானை ஒதுங்கியதற்கு என்ன காரணம்? பன்றியின் அருகில் சென்றால்,  தம் மீது சேறு ஒட்டிக் கொள்ளுமே என்பதற்காக, பன்றியை விட்டுச் சற்று விலகி செல்கிறதே அல்லாமல், பன்றிக்குப் பயந்து கொண்டு அல்ல. அவ்வாறு, முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். அதற்காக நாமும் பேச வேண்டிய அவசியமில்லை. எனவே இந்த அளவிற்குக் கேடுகெட்டத்தனமாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆத்திரத்தின் உச்சியில், 4 மாதங்களில் பதவி போகப்போகிறது என்ற விரக்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பக்கம் பக்கமாக அறிக்கை கொடுக்கிறார்கள். இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், எப்.எம்.களிலும், சமூக வலைதளங்களிலும் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்கள் கட்சியின் சார்பில் விளம்பரங்கள் கொடுத்தால் அதற்கு நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் அரசாங்கத்தின் பணத்தை எடுத்து இன்றைக்கு பக்கம் பக்கமாக நாள்தோறும், கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது யார் வீட்டுப் பணம்? உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? நம்முடைய பணம். நம்முடைய பணம் என்றால், நாம் இந்த அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறோம். அந்த வரி அரசாங்கத்திற்குச் செல்கிறது. நம்மிடத்திலிருந்து வாங்கும் வரியைப் பயன்படுத்தி அரசாங்கம் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அந்த வரியைப் பயன்படுத்தி மக்களுக்குப் பயன்படும் வகையில் சாதனைகளைச் செய்ய வேண்டும். ஆனால் இன்றைக்கு நாம் தரக்கூடிய வரிப் பணத்தை எடுத்து, அரசாங்கத்தின் சார்பில் கட்சிக்கு விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புயல் நிவாரண நிதி கேட்டால், நிதி இல்லை என்கிறார்கள். விவசாயிகள் செத்து மடிகிறார்கள். அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்டால், பணம் இல்லை என்கிறார்கள். ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை உடனே வழங்குங்கள் என்று கேட்டால், பணம் இல்லை என்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருக்கிறது, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை இந்த அரசு தர மறுக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் வக்கில்லாமல் இந்த அரசாங்கம் தொடர்ந்து விலைவாசியை உயர்த்திக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நிலையில் இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமையான இந்த 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். நீங்கள் எல்லாம் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் இங்கு அமைதியாக, அடக்கமாக கட்டுப்பாடாக, இருக்கும் காட்சியைப் பார்க்கின்றபோது நிச்சயமாக, உறுதியாக 4 மாதங்களில் தமிழ்நாட்டில் நம்முடைய உதய சூரியன் உதிக்கத் தான் போகின்றது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.