எல்லையில் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தியாக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், நாடு அவர்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்றும், வீரர்களின் தியாகத்தை எண்ணி பெருமைப்படுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், அதேபோல் சீன தரப்பிலும் 35 ராணுவத்தினர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில்  இந்திய ராணுவ வீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  இந்நிலையில் எல்லையில் நடந்த  அசம்பாவிதம் குறித்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்ததுடன்,  பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம் நரவானே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் முப்படை தலைவர்களுடன் எல்லை விவகாரங்கள் குறித்துஆலோசனைநடத்தினார்.  

பின்னர், ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் கடமையைச் செய்யும்போது தங்கள் உயிரைக் நாட்டிற்காக கொடுத்தனர், இந்த தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது,  கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்களை இழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது, எங்கள் வீரர்கள் தங்கள் கடமையைச் செய்வதன் மூலம் நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். அவர்களது தியாகத்தை நாடு ஒருபோதும் மறக்காது. லடாக்கில் எல்.ஐ.சி ஒட்டி ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர், பதிலடி கொடுத்ததில் 35 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர், தியாக வீரர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன், நாடு அவர்களுடன் தோளோடு தோள் நிற்கும் எனவும், எங்கள் நாட்டின் வீரர்கள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.