இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதம் உள்ளிட்ட தளவாடங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பெரும் வாய்ப்பை தமிழகத்திலுள்ள பெரிய, சிறிய மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு வழங்க உள்ளது மத்திய அரசு. ‘டிபென்ஸ் காரிடர்’ அதாவது ராணுவ தொழில் பெருவழி தடமாக சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் ஓசூர் பகுதிகளை அறிவித்திருக்கிறது. 

தேசிய ராணுவ அமைச்சர் அதிலும் தமிழர் எனும் முறையில் நிர்மலா சீதாராமன், இப்பேர்ப்பட்ட பெரும் வாய்ப்பை தமிழக தொழில் துறைக்கு தருவதில் பெரிய பெருமிதத்துடன் முன்னின்று செய்து கொண்டிருக்கிறார் விஷயங்களை. இந்நிலையில் என்னதான் மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்கான பல விஷயங்களை முன்னெடுத்தாலும், இங்கிருக்கும் அமைச்சர்கள் ’பலவித ஆதாய’ நோக்குடன் அதில் முட்டுக்கட்டை போடுதல், இழுத்தடித்தல், எதையாவது எதிர்பார்த்தல் ஆகிய காரியங்களை செய்து இம்சை தருகிறார்கள் என்பது நிர்மலாவின் ஆதங்கம். 

ஏற்கனவே இதே ராணுவ தளவாட பூங்கா திறப்பு விஷயத்தில் நிர்மலாவுக்கும், தமிழக அமைச்சர் வேலுமணிக்கும் இடையில் உரசல் உருவானது. நிர்மலாவை வேலுமணி மிரட்டினார் எனுமளவுக்கு சர்ச்சைகள் வெடித்தன. நிர்மலாவும் இதற்கு பதிலடிகளை தராமலில்லை. விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பக்கத்து நாற்காலியில் வைத்துக் கொண்டே, அந்த மாவட்டம் வளர்ச்சி பெறாமல் முடங்கிக் கிடப்பதை கிழித்தெடுத்தார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ‘டிபென்ஸ் காரிடர்’ விஷயத்திலும் நிர்மலாசீதாராமன் தமிழக அமைச்சரவையின் முகத்திரையை கிழித்திருக்கிறார் என்கிறார்கள். அதாவது ராணுவ தொழில் பெருவழித்தடமாக தமிழகம் மாறும் விஷயத்தில் தமிழக அரசின் ஒத்துழைப்பை பற்றி பேசியவர் ”இப்போது வரைக்கும் எனக்கு நல்ல விதமான ஒத்துழைப்பையே தமிழக அரசு வழங்குகிறது!” என்று ஒற்றை வரியை சொல்லிவிட்டு அதன் பின்...”தமிழக அரசு இந்த விஷயத்தில் கொடுக்க வேண்டிய அனுமதிகளை கொஞ்சம் சீக்கிரமாக கொடுக்க அவேண்டும். அதுல எந்த விதமான இடையூறுகளும் இல்லாமல் பார்த்துக்கணும். தடைகளும் இல்லாமல் பார்த்துக்கணும். குறிப்பா கீழ்மட்ட அதிகாரிகளை இன்னும் கொஞ்சம் திறமையோடு செயல்பட வைக்கணும். கோப்புகள் தேங்கிக் கிடக்க அனுமதிக்கமால் சீக்கிரம் ஒப்புதல் கொடுக்கணும். மேலும் உற்பத்தியாலர்களுக்கு கொடுக்கக்கூடிய ‘ஆர்டர்’களுக்கு நடுவில் எந்தவிதமான இடையூறும் வராஅமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லியிருக்கிறார். 

இடையூறு கொடுக்க கூடாது, கோப்புகளில் கையெழுத்திடுவதை துரிதப்படுத்தணும், உற்பத்தியாளர்களுக்கு டார்ச்சர் கொடுக்க கூடாது! என்றெல்லாம் வரிசை கட்டி ராணுவ அமைச்சர் பேசியிருப்பதன் மூலம் இந்த இம்சைகள் அத்தனையையும் இந்த அமைச்சர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார் நிர்மலா! என்கிறார்கள் விமர்சகர்கள். 

தமிழகம் தொழில்துறை உள்ளிட்ட விஷயங்களில் பெரும் முன்னேற்றம் அடையாமல் தேங்கியே நிற்க காரணம் இந்த அமைச்சர்களின் புத்திதான்! என்பதைத்தான் நேரடியாக சொல்லாமல் ‘அப்படி செய்யகூடாது! இப்படி பண்ண கூடாது!’ என்று நாசூக்காக நாக் அவுட் கொடுத்திருக்கிறார் மேடம். அதிலும் ‘கீழ்மட்ட அதிகாரிகளை இன்னும் திறமையோடு செயல்பட வைக்க வேண்டும்.’ என்று கூறியிருப்பதன் மூலம் ஆளும் அரசியல்வாதிகள் மட்டுமில்லாது தமிழக அதிகாரிகள் கட்டமைப்பின் கீழ் மட்டமும் திறமையற்றதாகாவே இருக்கிறது! என்றும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்! என்கிறார்கள். 
இப்படி அசிங்கப்பட்ட பிறகாவது திருந்துவார்களா! தமிழகம் முன்னேறுமா?