கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்றார். சசிகலாடிவ, அதிமுக பொது செயலாளராக, அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பொதுக்குழு, செயற்குழு கூட்டி தேர்ந்தெடுத்தனர்.

இதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக மூத்த நிர்வாகிகள் தரப்பில் ஒட்டப்படும் சசிகலா போஸ்டர்கள், பேனர்களை கிழித்து எறிந்தனர்.

இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு, எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தீபாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக பேசப்பட்டது.
இந்நிலையில், முதலச்சர் ஒ.பன்னீர்செல்வம், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அதிமுக பொது செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என பேசப்பட்டது. இதற்கிடையில் நேற்று இரவு ஒ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்தார்.

இதைதொடர்ந்து நேற்று காலை ஒ.பி.எஸ். செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, எனது குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன். அவருக்கு அழைப்பு விடுப்பேன்” என கூறினார்.

ஏற்கனவே தீபாவுக்கு ஆதரவாளர்கள் அதிகளவில் சேருவதால், அதிமுகவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. தற்போது ஓ.பன்னீர்செல்வம், ஏற்படுத்தியுள்ள பிரச்சனையும், தீபாவுக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளதும், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை தரும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
