deepa waiting to meet modi
அதிமுகவில் உள்ள அணிகளின் குளறுபடி, போயஸ் கார்டனில் நடந்த தகராறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் புகார் செய்ய தீபா அனுமதி கேட்டுள்ளார்.
ஜெயலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவில் ஒவ்வொரு அணியாக உருவாகி வருகிறது. இதில், முதல் அணியாக தொடங்கியவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. கடந்த பிப்ரவரி 24ம் தேதி, ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.
தற்போது அது துணை அமைப்பாக செயல்படும் என்று அறிவித்துள்ள அவர் அதிமுக தீபா அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.

தீபாவை தொடர்ந்து தனி அணிகளை உருவாக்கிய ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர், தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக இரு தரப்பினரும், லட்சக்கணக்கில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
எடப்பாடி - ஓ.பி.எஸ். அணியினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தீபாவும், தாங்கள்தான் உண்மையான அதிமுக என கூறி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார்.
ஏற்கனவே 52 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தீபா அணியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான வக்கீல் பசும்பொன் பாண்டியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் ராமச்சந்திரன், வெங்கட் ஆகியோர் டெல்லியில் நேற்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார். அப்போது, அவரது தம்பி தீபக்குடன் தகராறு ஏற்பட்டு, அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்நிலையில், மேற்கண்ட சம்பவங்கள் குறித்து முறையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தீபா திட்டமிட்டுள்ளார். இதற்காக டெல்லி சென்றுள்ள தீபா அணியினர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு தீபா எழுதியுள்ள கடிதத்தை நேரில் வழங்கினர்.
போயஸ் கார்டன் விவகாரம் தொடர்பாகவும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தங்களை சந்தித்து நேரில் புகார் அளிக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
