அதிமுகவில் இரு அணிகளாள இருந்து 3ஆக மாறி, தற்போது 4 அணிகளாக உள்ளன. இதில் யாருக்கு அதிமுக தலைமை அலுவலகம் என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.

ஏற்கனவே எடப்பாடி அணியினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் மட்டுமே மோதல் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக டிடிவி.தினகரனும் களம் இறங்கியதால், அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு 3 அணிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக தலைமை கழகம் எனக்கே சொந்தம். அதை நானே மீட்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பலம் பொருந்தி அ.தி.மு.க. தொண்டர்களின் ஜீவ நாடியாய் என்றென்றும் மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர். அவரது இலக்காலும் உத்வேகத்தாலும் ஓங்கி உயர்ந்த இயக்கத்தை தூக்கி நிறுத்திய எனது அத்தை ஜெயலலிதாவின் துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் என்னகத்தே கொண்டுள்ளேன்.

அவரது ரத்தத்தின் ரத்தமான வாரிசாய் அ.தி.மு.க.வையும் எக்கு கோட்டையான கட்சி அலுவலகத்தையும் கைப்பற்றி வெற்றிச் சின்னம் இரட்டை இலைச் சின்னத்தை நிலை நிறுத்துவதும் துரோக கும்பலின் சரித்திரத்தை முறியடித்து வெற்றி காண்பதே எனது லட்சியமாகும். அதுவே அத்தைக்கு நான் செய்யும் நன்றிக்கடனாகும்.

துரோக கும்பலை விரட்டியடித்து கட்சியையும், அலுவலகத்தையும், வெற்றிச் சின்னமான இரட்டை இலையையும் கைப்பற்றி ஜெயலலிதாவின் கனவை நினைவாக்கிட எனக்கு துணை நின்று கடமையாற்றிய லட்சோப லட்சம் தொண்டர்களே வீறு கொண்டு அணி திரள்வீர்.

கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டும் தினகரன் கட்சி அலுவலகம் செல்வதாக செய்தியறிந்து திகைக்கவில்லை நான். நகைக்கவே செய்கிறேன். ஏற்கனவே எனது அத்தைக்கு மாற்றாய் சின்னமாவாக அரிதாரமிட்டு கட்சி அலுவலகம் சென்ற சசிகலாவின் நிலை நாடறியும்.

எதிரிகளுக்கு பாடம் கற்பித்தவர் என் அத்தை. கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிபாடும் என்பர். என் அத்தையின் கம்பீரத்தை பறை சாற்றிய கட்சி அலுவலகமும் தொடர்ந்து துரோக கும்பலுக்கு பாடம் புகட்டும் என்பதே நிதர்சனமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.