தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக முதல்வராக ஒ.பி.எஸ், அதிமுக பொது செயலாளராக சசிகலா ஆகியோர் பொறுப்றேறுள்ளனர். இதில், அதிமுக தொண்டர்கள் பலர், சசிகலா அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றதை விரும்பவில்லை. இதனால், அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள், பேனர்களை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், அதிமுகவில் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என்று தினமும் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கில் திரண்டு தீபாவை வற்புறுத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தீபா பெயரில் பேரவைகள் தொடங்கப்பட்டு, உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இதையொட்டி தீபா, நேற்று தொண்டர்களை சந்தித்தபோது, “தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை (17-ந் தேதி) அறிவிக்கப்போவதாக” தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் ஆர். செல்வராஜ் என்பவர், பெங்களூரில் தீபா பெயரில் பேரவையை தொடங்கி உள்ளார். கர்நாடக மாநில அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக வேலை பார்க்கிறார்.

தீபா பேரவை தொடங்குவது தொடர்பாக செல்வராஜ் சென்னை சென்று தீபாவை சந்தித்து ஆலோசனையும் நடத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தீபா பேரவை தொடக்கம் குறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் பெங்களூருவில் பல்வேறு இடங்களிலும் கோலார் தங்கவயல் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், தீபாவின் அரசியல் பிரவேசம், தீவிரம் அடைந்துள்ளது என தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.