முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்கும்படி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் வற்புறுத்தினர்.
ஆனால், தொண்டர்கள் மத்தியில் சசிகலா, அதிமுக பொது செயலாளராக பதவியேற்பது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒருபுறம் சசிகலாவை ஆதரித்து அதிமுக நிர்வாகிகளும், மறுபுறம் தீபாவை ஆதரித்து அதிமுக தொண்டர்களும் பேனர், கட்அவுட், போஸ்டர்கள் அமைத்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் சசிகலா போஸ்டர், பேனர்களை, அதிமுக தொண்டர்கள் கிழித்து எறிகின்றனர்.

இதற்கிடையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சசிகலா, பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து கடந்த 31ம் தேதி பொது செயலாளராக பதவியேற்றார். அதே நேரத்தில், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டில் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து தீபாவை, அரசியலில் களம் இறக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீபா பேரவை தொடங்கி, உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. குறிப்பாக, ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் இளம் புரட்சித்தலைவி தீபா பேரவை தொடங்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், ஜெயலலிதவின் இறப்புக்கு பின், அதிமுகவில் இருந்து விலகிய நகடிர் ஆனந்த்ராஜை, அதிமுக தொண்டர்க்ள் நேற்று சந்தித்தனர். அவரிடம், தீபாவுக்கு ஆதரவு தரவேண்டும் என்றும், தீபாவின் புதிய கட்சியில் இணைய வேண்டும் என்றும் ஆதரவு கேட்டனர். அவரும், பரிசீலனை செய்து பதில் அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், பொங்கல் திருநாள் வாழ்த்து கூற நேற்று ஏராளமான தொண்டர்கள் தீபா வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது, அவர்களை சந்தித்த தீபா, அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனார். பின்னர், அவர் பேசியதாவது:-
“நான் அரசியலுக்கு வரவேண்டும் என, நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் அனைவரின் எதிர் பார்ப்புகளுக்கும் ஏற்ப எனது செயல்பாடுகள் இருக்கும். விரைவில் நற்பணிகளை நான் தொடங்குவேன். இதுபற்றிய விரிவான அறிக்கையை நாளை வெளியிடுவேன். நாளை மறுதினம் அனைத்து தொண்டர்களையும் சந்திப்பேன்” என பேசினார்.
