அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மக்களின் உணர்வுக்கு நிச்சயம் மதிப்பளிப்போம். தீபாவுக்கு துணையாக இருப்பேன் என தீபாவின் கணவர் மாதவன் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுக பொது செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதவின் தோழி சசிகலா பொறுப்பேற்றார். சசிபொறுப்பேற்றதில் அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், அதிமுக தொண்டர்கள் இடையே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், சசிகலாவை ஆதரித்து ஒட்டப்படும் போஸ்டர்கள், பேனர்கள், கட்அவுட்களை அதிமுக தொண்டர்களே அகற்றுகின்றனர். மேலும், அதே இடத்தில் ஜெயலலிதாவின் படத்துடன் சேர்த்து தீபாவின் படம் அமைந்த போஸ்டர்களை, கட்அவுட், பேனர்களை அமைத்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அரசியலுக்கு வரும்படி, தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள், சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தீபா வீட்டின் முன்பு ஒரு வருகைப் பதிவேடும் வைக்கப்பட்டுள்ளது. அதில், வீட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்கள், தீபாவை அரசியலுக்கு வருமாறு கூறி கையெழுத்திட்டு செல்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று தீபா வீட்டுக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களை, தீபாவின் கணவர் மாதவன் சந்தித்து பேசினார்.

மாதவனைப் பார்த்ததும், அதிமுக தொண்டர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். பெண் தொண்டர்கள் பலரும், மாதவனின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க பேசினர்.

“எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்து வருகிறோம். தீபாவை பார்க்கும்போது ஜெயலலிதாவை பார்ப்பது போலவே உள்ளது. யாருக்காகவும் பயப்பட வேண்டாம். தயங்காமல் அரசியலுக்கு வாருங்கள். நாங்கள் மட்டும் அல்ல, ஏராளமான பொது மக்களுக்கும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்” என கூறினர்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட மாதவன், உங்கள் உணர்வுகளுக்கு தீபா நிச்சயம் மதிப்பளிப்பார். அவருக்கு நான் நிச்சயம் துணையாக இருப்பேன் என்று அதிமுக தொண்டர்களிடையே கூறினார். இதையடுத்து அனைவரும கலைந்து சென்றனர்.