Deepa comment on Rajini
தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினி, சினிமாவும் அரசியலும் வேறுவேறு என்பதைப் புரிந்து கொண்டுதான் அரசியலில் இறங்கி இருக்கிறாரா? அவரது அரசியல் கொள்கைகள் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பது சந்தேகம்தான் என்று ஜெ.தீபா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவொற்றியூரில் உள்ள வீடு இல்லாதோர் தங்கும் விடுதியில் உள்ள முதியோர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் போர்வை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. புத்தாண்டு தினத்தையொட்டி நடைபெற்ற இந்த விழாவில், மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவையின் மாநில பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, இதில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு, ஜெ. தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்றார். ஆனால், அவரால் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை சமாளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலுக்கு ரஜினி வருவதால், எந்தமாதிரியான அரசியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு, இனிமேல்தான் அவர் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அதன்பிறகுதான் அவரது கொள்கை என்ன? மக்கள் பிரச்சனைகளில் அவரது நிலைப்பாடு என்ன? என்பது தெரிய வரும் என்றார்.
சினிமாவும், அரசியலும் வேறு வேறு என்பதை புரிந்து கொண்டு அரசியலில் இறங்கி இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பிய தீபா, அவரது அரசியல் கொள்கைகள் தமிழக மக்களிடையே எடுபடுமா என்பது சந்தேகம்தான் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘
மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார். இந்த அரசை விரைவில் கலைக்க வேண்டும் என்றும் ஜெ.தீபா அப்போது வேண்டுகோள் விடுத்தார்.
