பா.ஜ.கவில் இணையும் முடிவை மு.க.அழகிரி தள்ளிப்போட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.கவில் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டதோடு மட்டும் அல்லாமல் நீக்கியும் வைக்கப்பட்டுள்ள அழகிரிக்கு மீண்டும் அந்த கட்சியில் தொண்டராகும் வாய்ப்பு கூட இல்லாமல் ஸ்டாலின் கேட் போட்டு வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டுவதாக கூறி அதிலும் அழகிரியால் வெற்றி பெற முடியவில்லை. 

இதனை தொடர்ந்து திருவாரூர் இடைத்தேர்தலில் களம் இறங்கி கெத்து காட்ட அழகிரி தயாரானார். அதுவும் பா.ஜ.க வேட்பாளராக அழகிரி களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திருவாரூர் தேர்தல் ரத்தானதால் அழகிரி தொடர்பான செய்திகளும் அடங்கின. இதனை தொடர்ந்து அழகிரியை பா.ஜ.கவில் இணைப்பதற்கான வேலைகள் நடைபெற்றன. 

எந்த கட்சியிலும் இல்லாமல் இருப்பதற்கு தேடி வரும் பா.ஜ.கவில் இணைந்தால் என்ன என்று அழகிரி யோசித்து வருவதாக கூட கூறப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரைக்கு மோடி வரும் போது அவரை சந்தித்து அழகிரி பா.ஜ.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மோடி  ஞாயிறன்று மதுரை வந்த நிலையில், வெள்ளியன்று அழகிரியை பா.ஜ.க மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 

இதனால் மோடியை அழகிரி சந்திப்பதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மீண்டும் பரபரப்பானது. ஆனால் மோடி மதுரை வந்த நிலையில் அழகிரியை சந்திக்கவில்லை. இது குறித்து விசாரித்த போது தான் தற்போதைய சூழலில் அண்ணன் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்தால் தேர்தலுக்குள் அந்த பரபரப்பு அடங்கி சாதாரண விஷயமாகிவிடும். அதனால் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினின் வியூகத்தை தெரிந்து கொண்டு அண்ணன் களம் இறங்குவார் என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமானவர்கள். 

அதனால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அண்ணன் பா.ஜ.கவில் இணைவது உறுதி அதுமட்டும் அல்லாமல் அண்ணன் மதுரையில் மீண்டும் எம்.பி பதவிக்கு போட்டியிட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.