decision against speaker in tamilnadu assembly
தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, நாளை மறுநாள் (23ம் தேதி) சட்டமன்றத்தில், வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது.
அப்போது, சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது. தி.மு.க உறுப்பினர்கள், வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி அரசு 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், சபாநாயகர் தனபால் நடுநிலையாக செயல்படவில்லை என்று திமுக குற்றம் சாட்டியது. மேலும், 'சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம்' என்றும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, பிப்ரவரி 21ம் தேதி, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்எல்ஏக்கள், சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீனிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கடிதத்தை அளித்தார்.

அதன்படி மார்ச் 23ம் தேதி, சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால் குறித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஒருவேளை, சபாநாயகர் தனபால் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
