Asianet News TamilAsianet News Tamil

டிசம்பர் 5 ஜெயலலிதா நினைவுதினத்தை அனுசரிக்கலாம்..! ஹைகோர்ட் அதிரடி..!

december 5 can observed as jayalalitha memorila day said high court
december 5 can observed as jayalalitha memorila day said high court
Author
First Published Dec 4, 2017, 3:52 PM IST


ஜெயலலிதா இறப்பில் மர்மம் நீடிப்பதால், அவரது நினைவுதினத்தை அரசு அனுசரிக்கத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், மாரடைப்பால் ஜெயலலிதா இறந்துவிட்டதாக டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்த்ததாகவும் அவர் நலமாக இருக்கிறார் எனவும் கூறிய அமைச்சர்களே, அவரின் இறப்பிற்குப் பிறகு, ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என முரண்பட்ட கருத்தை தெரிவித்தனர். இதனால் சர்ச்சைகளும் சந்தேகங்களும் கிளம்பின.

மேலும், டிசம்பர் 5க்கு முன்னரே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை உறுதி செய்து படிவங்களில் இடப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

அதேபோல, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த தினமான டிசம்பர் 5ம் தேதியை(நாளை) அவரது நினைவு அரசு அனுசரிக்க உள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவுதினத்தை அரசு அனுசரிக்கக்கூடாது என குமாரவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. எனவே அதுதொடர்பாக விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. மேலும் அவரது கைரேகை பதிவு தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதிதான் இறந்தாரா என்பதில் சர்ச்சையும் சந்தேகமும் உள்ளதால், அன்றைய தினத்தை ஜெயலலிதாவின் நினைவுதினமாக அரசு அனுசரிக்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நாளை டிசம்பர் 5 என்பதால் இன்று அதற்குள் அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அந்த மனுவை விசாரித்தது.

அப்போது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழின் அடிப்படையில், அவரது நினைவுதினம் டிசம்பர் 5ல் அனுசரிப்பதில் எந்த தவறும் இல்லை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரித்துவரும் நிலையில், பிறப்பு, இறப்பு குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

எனவே டிசம்பர் 5(நாளை) ஜெயலலிதாவின் நினைவுதினத்தை அனுசரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios