இத்தனை நாட்களாக மக்களை கண்டுகொள்ளாதவர்கள், தேர்தலுக்காக பொங்கலுக்கு ஆயிரம், சிறப்பு நிதி இரண்டாயிரம் கொடுக்கிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.
மத்திய சென்னையில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் விருப்ப மனு அளித்திருந்தார். அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. அவரும் ஓசையில்லாமல் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுவருகிறார். இந்நிலையில் மத்திய சென்னைக்கு உட்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
 “சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. நான்கரை ஆண்டுகளாக ஏன் இதை பிரதமர் அறிவிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் தமிழக மக்களை போராட வேண்டிய நிலைக்கு தள்ளியது மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும்தான்.

 
சென்ற ஆண்டு பொங்கல் திருநாளுக்கு 100 ரூபாயைப் பொங்கல் பரிசாகக் கொடுத்தார்கள். இந்த வருடம் திடீரென 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். உலகத்திலேயே எங்கும் நடக்காத ஓர் அநியாயம் தமிழகத்தில் நடக்கிறது. திடீரென 2000 ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கூறி கொடுத்து வருகிறார்கள். தேர்தல் என்றால் என்னென்ன வேலை பார்க்கிறார்கள் எனப் பாருங்கள்.
திடீரென மக்கள் மீது ஏன் இவர்களுக்கு பாசம்? அந்தப் பணம் யாருடையது? அது எல்லாமே மக்கள் பணம். நீங்கள் பால் வாங்கும்போது, பஸ் டிக்கெட் வாங்கும்போது, சிறிய வத்திப்பெட்டி வாங்கும்போது கொடுக்கிற வரிப்பணம்தான் அது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை எடுத்தே மக்களுக்கு கொடுக்கிறார்கள். 


 உங்களுக்கெல்லம் ஒரே ஒரு வேண்டுகோள். உங்கப் பணம் அதனை வாங்கிக்கொள்ளுங்கள். அதற்காக இரக்கப்பட்டுவிடாதீர்கள்.  நல்லவர்கள் என நினைத்து காலை வாறி விட்டுவிடாதீர்கள். இத்தனை நாட்களாக மக்களை கண்டுகொள்ளாதவர்கள், தேர்தலுக்காக பொங்கலுக்கு ஆயிரம், சிறப்பு நிதி இரண்டாயிரம் எனக் கொடுக்கிறார்கள்”.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.