ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும்பட்சத்தில் நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்தை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபுவும் மத்திய சென்னை எம்.பி. தயாநிதிமாறனும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு 18 மளிகை பொருட்களுடன் 500 ரூபாய் உதவித் தொகையை வழங்கினர். பின்னர் தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசினார். “ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதுதான் கொரோனாவை தடுக்க நல்ல வழி. அப்படி ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும்பட்சத்தில், சென்ற முறைபோல அல்லாமல் அதை முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.  தினக்கூலியை நம்பி வாழ்க்கை நடத்தும் அடித்தட்டு மக்களுக்கு, 10 ஆயிரமோ, 15 ஆயிரமோ மத்திய மாநில வழங்க வேண்டும்.

 
சென்னையில் ஒன்றரை கோடி பேர் இருக்கிறார்கள். ஆனால், கொரோனா பரிசோதனை செய்ய 13,000 உபகரணங்கள் மட்டுமே இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியிருக்கிறார். இது சென்னை மாநகருக்கு போதாது. எனவே, நோய்த் தொற்றை கண்டறிதல் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும். இதேபோல கொரொனா வைரஸ் தொற்றுக்கான அடுத்த கட்ட நகர்வை திட்டமிட்டு தெளிவோடு வெளிப்படையாக மத்திய மாநில அரசுகள் அணுக வேண்டும்” என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.