மக்களுக்காக பிரதமரும், முதல்வரும் நிவாரண உதவி கேட்பதை பிச்சை எடுப்பதாக தயாநிதி மாறன் பேசுவது ஆணவத்தின் உச்சம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நிவாரண நிதி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பிரதமர் மோடி, முதல்வரை தரக்குறைவாக பேசியுள்ளார். தன்னை ஒரு நாகரிக மனிதராகவும், அறிவார்ந்த நபராகவும் காட்டிக் கொள்ள முயற்சி செய்யும் தயாநிதி மாறனின் இன்னொரு முகம் வெளிவந்திருக்கிறது. அரசுக்கு ஆக்கப்பூா்வமான விமா்சனங்களை அவர் சொல்லியிருக்கலாம். அரசு நடவடிக்கைகளில் குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம். நிவாரணப் பணி மேம்பாட்டுக்காக கருத்துகள் சொல்லியிருக்கலாம். ஆனால், அவை அனைத்தையும் விட்டு விட்டு வெற்று அரசியல் பேசி, தனது அறியாமையையும், அரசியல் வெறித்தனத்தையும் வெளியிட்டுள்ளார் தயாநிதி மாறன்.

பேரிடர் காலங்களில் மாநில அரசும் மத்திய அரசும் நிவாரண நிதி சேகரிப்பது வழக்கமான ஒன்றாகும். இதற்காகவே பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. தயாநிதி மாறன் இதனை அறியாதவராக இருக்க முடியாது. மாநிலத்தில் திமுக ஆட்சி செய்தபோது, அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியே பலமுறை முதல்வராகப் பணியாற்றினார். அப்போதெல்லாம் மக்களிடம் நிவாரணம் கோரிய உதாரணங்கள் பல உள்ளன. பிச்சைக்காரர் ஒழிப்பு என்பது ஒரு பேரிடா் கிடையாது. ஆனால், அதற்குக்கூட கருணாநிதி நிவாரண நிதிகளைச் சேகரித்தார் என்பதை தயாநிதி மாறன் மறுக்க முடியுமா?.

தனக்கென வாழாமல் நாட்டு மக்களுக்காக வாழும் பிரதமா் மோடிக்கு, இந்தச் சமுதாயத்திடம் நிவாரண நிதி கோர 100 சதவீதம் தகுதி இருக்கிறது. ஆனால், தயாநிதியோ அவரது குடும்பத்தாரோ அல்லது திமுகவோ அரசின் மீதும், மக்கள் மீதும் என்ன அக்கறை காட்டியுள்ளனர். என்ன நிதி அளித்துள்ளனர். கொடுக்க மனம் இல்லை என்பதால்தான் நிவாரணப் பணியில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் தயாநிதி. இருப்பவரிடம் இருந்து இல்லாதவருக்கு வாங்கிக் கொடுக்கும் செயல் ஓா் அறமாகும். பெரு நிறுவனங்களுக்குக் கூட சமூக அக்கறை இருக்க வேண்டும் என்பதற்காகவே சி.எஸ்.ஆா்., போன்ற சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

ஆனால், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பம் நிவாரணத்துக்கு என்ன செய்திருக்கிறது?. மக்களுக்காக பிரதமரும், முதல்வரும் நிவாரண உதவி கேட்பதை பிச்சை எடுப்பதாக தயாநிதி மாறன் பேசுவது ஆணவத்தின் உச்சமாகும். தயாநிதி மாறன் தனது தவறை உணர்ந்து அவர் பயன்படுத்திய அநாகரிகமான வாா்த்தைகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு தயாநிதி மாறனை சரியான முறையில் வழி நடத்த வேண்டும். இனி வரும் நாள்களில் தனது கட்சிப் பிரமுகா்கள் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் பேசுவதை ஸ்டாலின் தடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.