தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்த புரவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கு 40 கிலோ மீட்டர், பாம்பனுக்கு மேற்கு தென்மேற்கு திசையில் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது அடுத்து 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும், இதனால் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழையும், மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது. அதேபோல் பாண்டிச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

அதேபோல் அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடயுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.