கோவையில் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிமுக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கோவையில் ஒரே இரவில் நான்கு கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் கூரையும், பொருட்களும் எரிக்கப்பட்டுள்ளதுடன், திரிசூலம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி, போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் எனத் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து, முழுமையான விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் தனித் தமிழ் நக்சல் இயக்கங்களால் கோவைக்குப் பேராபத்து ஏற்படும் முன்னரே, இவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக பிரமுகர்களின் கடை எரிப்பு, கார் எரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பாஜக மாநிலப் பொருளாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் மன நோயாளி என்று காவல்துறையினர் கூறுவது புனையப்பட்ட கதை. இதில் காவல் துறையின் திறமைகள் கேள்விக்குறியாகியுள்ளன.

கடந்த காலங்களில் நடந்த பயங்கரவாதம்போல இனியும் நடக்க அனுமதிக்கக்கூடாது. கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிமுக கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஒருவேளை வாக்கு வங்கியை மனதில் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடவும் பாஜக தயங்காது. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பாஜகவுக்கு இரண்டாவது சிந்தனைதான். மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்.

கடவுள் இல்லை என்று கூறும் அரசியல் கட்சித் தலைவர்கள், இந்துக் கடவுள்கள் மட்டும் குறிவைப்பது ஏன்? தமிழ்க் கடவுள் முருகனைப் பழித்தவர்களுக்கு எதிராக அணிதிரளாத அரசியல் கட்சியினரை மக்கள் புறக்கணிப்பார்கள். மறைமுகமாக இந்துக்களுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்கள் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். இது வரும் தேர்தல்களில் அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள், இந்துக்களை மட்டுமின்றி, அமைதியை விரும்பும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களையும் ஒரே அணியில் திரட்டும். கோயில்களைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்குக்காக இல்லாமல், உண்மையாகவே அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்திருந்தால், நாங்கள் வரவேற்கிறோம்'' என அவர் தெரிவித்துள்ளார்.