5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சிகள் ஆபத்தானவை. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். விரைவாக தேர்தல்கள் நடத்தப்பட்டு புத்தாண்டு மலர்வதற்குள் உள்ளாட்சிகளில் புதிய நிர்வாகம் மலர வேண்டும். 

பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைப்படி திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி  அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விரைவில் மலரட்டும்.

இலங்கையின் வடக்கு மாநிலம் கடந்த 10 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சி கண்ணீரை வரவழைக்கக் கூடியது. புலிகளின் ஆட்சியில் மது என்பதன் அர்த்தமே தெரியாமல் இருந்த வட மாநிலத்தில், இப்போது மது, போதை மருந்து என அனைத்து தீமைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. நிழலின் அருமை வெயிலில் தெரிகிறது.’’எனத் தெரிவித்துள்ளார்.