பிரச்சார மேடையில் திமுகவை முகம் சுளிக்க வைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது
பிரச்சார மேடையில் திமுகவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அநாகரீகமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்றிரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஆளும் திமுகவின் மன்னராட்சி குடும்பத்தில் மன்னனுக்குப் பின்பு இளவரசன் பட்டம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற விதியின்படி, திமுகவின் சட்ட விதிகளின்படி, கருணாநிதி குடும்பம் மட்டும்தான் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்போது ஸ்டாலின் பதவியேற்றுள்ளார், ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. என்ன தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம் என்றே அவருக்கு மறந்து போய்விட்டது. அவருக்கு நேரம் போதவில்லை. இந்த ஆட்சியின் அவலத்தை இன்னும் 4 ஆண்டுகள் மக்களாகிய நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

இந்தத் தேர்தலிலே இவர்களை தட்டி கேட்கவில்லை என்றால், தேர்தலுக்கு பின்னர் திமுகவின் முழு ஆட்டத்தை பார்ப்பீர்கள். இன்னும் அவர்களின் முழுமையான முகத்தை காட்டவில்லை. நகர்ப்புற தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். 8 மாத ஆட்சியிலே, எதை எடுத்தாலும் பணம், ரௌடிஸம், அராஜகம், கட்டப்பஞ்சாயத்து என அதிகமாகிவிட்டது. இதற்கு முன்பாக இருந்த அதிமுக ஆட்சியிலும் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டது. இதே ஸ்டாலினால் கூட அதில் குற்றம்சாட்ட முடிந்ததா? ஆனால், இன்று திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் எத்தனை குளறுபடிகள். தவறு செய்த யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கடைநிலை ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் நடவடிக்கை எடுக்கும் லட்சணமா!
இதுவே அம்மா ஆட்சியில் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு கட்டத்தில் திமுகவினரை ஒருமையில் பேசத்தொடங்கினார். அவர் பேசுகையில், ”ஆம்பளையா இருந்த வாங்கடா. நான் இங்கையே 12 மணி வரை இருக்கேன். வாங்க” என்று பேசினார். ஏற்கனவே சி.வி.சண்முகம் மேடைப்பேச்சுகளிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் இவ்வாறு அநாகரீகமாக பேசுவது வழக்கம். பலமுறை பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலினுக்கு வார்த்தை போர் நடந்து வரும் நிலையில் மேடையில் திமுகவினரை அநாகரீகமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
