பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடமுள்ளது என்றும், இது தொடர்பாக  உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும்  அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கியதை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். ஆனால், அவர்கள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், உடல் நலம் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்.

பேரறிவாளனுக்கு பரோல் மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், பேரறிவாளனை பரோல் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் இது தொடர்பாக  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், பேரரறிவாளன் பரோலில் விடுவிக்கப்படுவது குறித்து விரைவில் நல்ல தகவல் வரும் என சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.