அதிமுக தலைவர்களுக்கு பாமக கொடுத்த விருந்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்றதன் பின்னணி பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைந்ததில் பாமக குஷியில் மூழ்கிக்கிடக்கிறது. அதுவும் 7+1 என்ற தொகுதிகள் கிடைத்திருப்பதால் ராமதாஸ் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கூட்டணியை எதிர்க்கட்சிகள் கிண்டி கிளறினாலும், அதைப் பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டுவருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.   

புதுக் கூட்டணிக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து வைத்தார் ராமதாஸ். தடபுடலாக நடந்த இந்த விருந்தில் முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.பி-க்கள் ஏழுமலை, ராஜேந்திரன், எம்.எல்.ஏ-க்கள் குமரகுரு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோரும் பங்கேற்றார்கள். அவர்களை ராமதாஸ் குடும்பத்தினர் வாசலில் நின்று வரவேற்றனர். 

இந்த விருந்தில் பங்கேற்றதில் ஹைலைட் என்னவென்றால், அமைச்சர் சி.வி. சண்முகம் பங்கேற்றதுதான். பாமக விருந்தில் அவர் பங்கேற்க மாட்டார் என்றே செய்திகள் வெளியாகின. பாமகவுடன் கூட்டணி அமைக்க தொடக்கம் முதலே சி.வி. சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது. காரணம், கடந்த 2006-ஆம் ஆண்டில் தேர்தல் முன்விரோதத்தில் சிவி சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் என்பவரை பாமகவினர் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.