தனித்துப் போட்டி என பாஜக இப்போது முடிவெடுத்திருப்பது எங்களது நம்பிக்கையையும், பலத்தையும், எதிர்கால சிந்தனையையும் வெளிக்காட்டுகிறது. அந்த வகையில் வளர்ந்து வருகிற எங்கள் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் பயன்படும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தும் சி.வி சண்முகத்தால் வெற்றி பெற முடியவில்லை என பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் விமர்சித்துள்ளார். தனது தோல்விக்கு பொறுப்பேற்று அவர்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என சி.வி சண்முகம் கூறிவந்த நிலையில் தற்போது கரூர் நாகராஜன் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் திமுகவுக்கு எதிராக அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக களமாடி வந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்து தேர்தலை தனித்து எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கூட்டணி வெளியேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்கள் ஆண்மை இல்லாதவர்கள் என பேசிய பேச்சுதான் முதன்மையான காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இரு கட்சிக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது. கூட்டணியில் இருந்து கொண்டே தொடர்ந்து பாஜக தலைவர்கள் அதிமுகவினரை சீண்டும் வகையில் பேசி வந்நதால் நீண்டகாலமாகவே அதிமுக தலைவர்கள் மத்தியில் பாஜக மீது மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நயினாரின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது.

இதனால்தான் இனி என்ன நடந்தாலும் சரி கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிடுவது என அதிமுக முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இடப் பங்கீடு பேச்சு வார்த்தையில் இரு கட்சிகளும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீண்டகாலமாகவே பாஜக கூட்டணி என்பது அதிமுகவுக்கு பெரும் சுமையாகவே இருந்துவந்தது என்றும், அதனால் அதிமுக இஸ்லாமிய- கிறிஸ்துவ வாக்குகளை இழக்க நேரிட்டது என்றும், பல நேரங்களில் அதிமுகவின் மூத்த அமைச்சர்களே வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் என வெளிப்படையாகவே சி.வி சண்முகம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில்தான் அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இருகட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளன.
இந்நிலையில் தனியார் வார இதழ் ஒன்றுக்கு பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் அதிமுக பாஜக கூட்டணி பிரிவு குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் நிரூபர் எழுப்பியுள்ள கேள்வி ஒன்றுகு பதிலளித்துள்ள அவர், முன்னால் அமைச்சர் சி.வி சண்முகத்தை கடுமையாக சாடியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு, இப்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது மக்களை சார்ந்து நடைபெறுகிற விளையாட்டு போட்டி போன்றது. தனித்துப் போட்டி என பாஜக இப்போது முடிவெடுத்திருப்பது எங்களது நம்பிக்கையையும், பலத்தையும், எதிர்கால சிந்தனையையும் வெளிக்காட்டுகிறது. அந்த வகையில் வளர்ந்து வருகிற எங்கள் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் பயன்படும்.

அதேபோல் முன்னாள் அமைச்சர் சி. வி சண்முகம் தனது தோல்விக்கு பாஜக தான் காரணம் என கூறிவருகிறார். அவர் சொல்வதை அவருடைய தொகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% உள்ஒதுக்கீடு செய்து கொடுத்திருந்த நிலையிலும் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி சண்முகம் தோல்வி அடைகிறார் என்றால், தனது தோல்விக்கு பொறுப்பேற்று அவர்தான் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளார். அதேபோல் சி.வி சண்முகத்தின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் விளக்கமாக கூறிவிட்டார். இனி இது குறித்து பேசுவதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
