Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு..!! கட்டுப்பாடுகளை தளர்த்தி எடப்பாடியார் அதிரடி ..!!

தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட  அனுமதிக்கப்படும்.

Curfew in Tamil Nadu extended till August 31, Edappadiyar action to relax restrictions
Author
Chennai, First Published Jul 30, 2020, 1:24 PM IST

ஆகஸ்டு மாதம் முழுவதும் ஊடரங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பெருநகர சென்னை காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை வழங்கியும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

Curfew in Tamil Nadu extended till August 31, Edappadiyar action to relax restrictions 

அதனால் தான், தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே  அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள்குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு,  ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும்  இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

Curfew in Tamil Nadu extended till August 31, Edappadiyar action to relax restrictions

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ( (Except Containment
Zones) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.  

2) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்புஇருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். 

Curfew in Tamil Nadu extended till August 31, Edappadiyar action to relax restrictions

3)  ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டுவருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன்  பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது. 

4) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.  

5) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios