புதுச்சேரியில் திங்கள் கிழமை (23-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு முறையைக் கடைபிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதன்படி நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் திங்கள் கிழமை முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதுச்சேரி முழுவதும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வாங்கும் பொதுமக்கள் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் வாங்கிக்கொள்ளலாம். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

 
புதுச்சேரி முழுவதும் அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களை உரிய பாதுகாப்போடுதான் நடத்த வேண்டும். மருத்துவ துறையினரின் சேவையை கை தட்டி பாராட்டு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று நாராயணசாமி தெரிவித்தார்.