வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ம் தேதி நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளுடன் பொது முடக்கத்தை தமிழக அரசும் நீட்டித்துள்ளது. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதுவரை 3,79,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.