அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளராக டி.டி.வி.தினகரனால் நியமிக்கப்பட்ட பண்ருட்டி  எம்எல்ஏ  சத்யா  பன்னீர் செல்வம், தனக்கு அந்த பதவி தேவையில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே இயங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிப் பொறுப்புகள் தொடர்பாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது ஆதரவாளர்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் உள்ள 19 பேருக்கு கட்சிப் பொறுப்புகளை டிடிவி தினகரன் அளித்துள்ளார்.

மகளிர் அணி இணைச் செயலாளர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயந்தி பத்மநாபன், சத்யா பன்னீர்செல்வம், உமாமகேஸ்வரி, எம்.சந்திரபிரபா ஆகியோரை நியமித்து டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்த மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி தனக்கு தேவையில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயை இயங்கப் போவதாகவும் தெரிவித்தார்.

சத்யாவின் இந்த பேச்சு அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.