நன்றி மறந்தவன் தமிழர்கள். சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி சொன்னதை தமிழர்கள் ஏன் கொண்டாடவில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில், இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே, மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக திமுக போராட்டத்தை நாளை அறிவிக்க இருக்கிறது. அப்போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாடத் தெரியாதவன் தமிழன். உலகளவில் தமிழின் பெருமையை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மேலும், சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி சொன்னதை தமிழர்கள் ஏன் கொண்டாடவில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.