அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி இப்படித்தான் என்றில்லை. மிக மிக மோசமான விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பது அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. கொள்கை உள்ளிட்ட பல ரீதிகளில் முரண்பட்ட இரு கட்சிகள் தேர்தலுக்காக இணைந்து கொள்வதென்பது ஜனநாயக தேசத்தில் தொடர்ந்து நடந்து வரும் அவலம்தான். 

ஆனால் பா.ம.க. என்னவோ பெரும் பாதகத்தை செய்துவிட்டது போல் ஆளாளுக்கு குதிக்கிறார்கள் என்பதே விமர்சகர்களின் வாக்கியம். அதிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிக அதிக அளவுக்கு தரையிறங்கி, ராமதாஸை வறுத்துவிட்டார் என்பதுதான் பொதுவான விமர்சனமாக இருக்கிறது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அகரம்சேரியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்...”இதே ராமதாஸ் அ.தி.மு.க. அரசை சமீபத்தில் கூட விமர்சித்து மேடையில் பேசிவிட்டு மட்டும் போகவில்லை, அதைப்பற்றி புத்தகமே போட்டிருக்கிறார். 

அதன் தலைப்பு ‘கழகத்தின் கதை’. அந்தப் புத்தகத்தை போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளுடன் கூட உட்கார்ந்து கொண்டு கையெழுத்துப் போடுகிறார். இதற்கு வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லையா? என நான் கேட்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் ஒரு பதவி தேவைதானா? 7 சீட் மட்டுமல்ல, 1 ராஜ்யசபா மட்டுமல்ல, அதற்குப் பின்னாலும் நிறைய இருக்கிறது. அதெல்லாம் வெளியில் வரத்தான் போகிறது.” என்று விளாசிவிட்டார். 

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரின் மனதையும் ஸ்டாலினின் மிக கடுமையான விமர்சனங்கள் ரொம்பவே காயப்படுத்திவிட்டனவான். ராமதாஸ் கூட சகித்துக் கொண்டு ‘பார்த்துக்கலாம்!’ என்றிருக்கிறார். ஆனால் அன்புமணியோ ‘இல்ல, இவரை இப்படியே விடக்கூடாது.’ என்று சொல்லிவிட்டு  பா.ம.க. வழக்கறிஞர் பாலுவுக்கு சில உத்தரவுகளை கொடுக்க...அவதூறு உள்ளிட்ட சில வகை வழக்குகளை ஸ்டாலின் மீது தொடுக்கும் ஆலோசனையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது அத்தரப்பு. 

வயதில் முதிர்ந்த அரசியல் தலைவர், அதுவும் தேசிய அளவில் மரியாதை மற்றும் மக்கள் நம்பிக்கையை பெற்று வைத்திருப்பவரைப் பார்த்து மானம் இல்லையா? என ஸ்டாலின் கேட்டிருப்பது மிகப்பெரிய அத்துமீறல். தேசிய அளவில் அவமானப்படுத்திவிட்டார்! மேலும் தேர்தல் அரசியலுக்காக கூட்டணி மட்டுமே வைக்கப்பட்டுள்ள நிலையில் ‘சீட்டுகளுக்கு பின்னால் வேறொன்றும் இருக்கிறது.’ என்று பூடகமாக சிலவற்றை சொல்லி, மக்களின் ஆர்வத்தை தூண்டி, பல வதந்திகளுக்கு இடமளித்து பேசியிருக்கிறார். அடிப்படை உண்மையோ, ஆதாரங்களோ இல்லாமல் ஸ்டாலின் சாட்டியிருக்கும் இந்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பல வித யூகங்கள், பொய் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இது டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை உருவாக்கி இருக்கிறது!... எனும் வார்த்தைகளுடன் அந்த வழக்கு தொடுக்கப்பட இருக்கிறதாம். சாதாரண சிவில் வழக்காக இல்லாமல், கிரிமினல் வழக்காக இதை கொண்டு போகும் எண்ணத்தில் இருக்கிறார்களாம். அதாவது ‘ஸ்டாலினின் விமர்சனத்தை பார்த்து அதிர்ச்சியாகி டாட்டருக்கு மன சஞ்சலமும், உடல் பாதிப்பும் உருவாகிவிட்டன.’ எனும் ரூட்டில் வழக்கு பயணப்பட இருக்கிறது! என்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, இந்த வழக்கில் வெற்றிபெற்று ஸ்டாலினுக்கு தண்டனை வாங்கி தந்தே தீருவது எனும் வெறியில் இருக்கிறாராம் சின்ன அய்யா. இது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பெரும் பகையை மூட்டியிருக்கிறது. வெளங்கிடும்!