ஊரடங்கு நீடிக்கப்படும்பட்சத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 5000 தொகையும், குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா நில செயலாளர் பாலருகிஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கொரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்கு போவதற்கான வாய்ப்பு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், ஊரடங்கு உத்தரவின் விளைவாக பாதிப்புக்குள்ளாகி கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி பாதுகாத்திட அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
1. ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற நிலையில் அடுத்த பதினைந்து நாட்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் உயிர் வாழ்வதற்கு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை, உணவுப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து குறைந்தபட்சம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 5000 தொகையும், குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிட வேண்டும்.
2. ஏற்கனவே நியாய விலைக்கடையில் மளிகை பொருட்களின் தொகுப்பு ரூபாய் 500க்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலையை ரூபாய் 250 ஆக குறைத்து இதே அளவு பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கிட வேண்டும்.
3. அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மொத்த நலவாரிய உறுப்பினர்களுள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினருக்கே இது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து நலவாரியங்களிலும் 31.3.2019 வரை பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 72,97,446 ஆகும். இவர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள தலா ரூபாய் 1000 மற்றும் உணவுப் பொருட்கள் கூடுதலாக வழங்கிட வேண்டும்.


4. கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மட்டும் இரண்டு நாள் கூடுதல் சட்டக்கூலி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் மிகச் சொற்ப அளவிலேயே பணிகள் நடந்துள்ளன. எனவே, கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வழங்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா 10 நாள் சட்டக்கூலியை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.
5. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை மீறியதாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு மேல் அந்த வாகனங்களை காவல்நிலையத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்து விடுவது என்கிற அடிப்படையில் அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழியினை பெற்றுக் கொண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களது வாகனங்களையும் திருப்பி அளிக்க வேண்டும்.
6. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது சில இடங்களில் காவல்துறையின் கடும் அத்துமீறல்கள் நடப்பதான செய்திகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமை மீறல்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
7. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு மருத்துவர்களுக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு செய்வதாக அரசு கூறியிருப்பதை போலவே, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் அந்தந்த நிர்வாகம் காப்பீடு வழங்க முன்வருவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் நோயாளிகளோடு நெருக்கமாக பணியாற்றும் ஊழியர்களுக்கும் காப்பீட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்” என அந்தக் கடித்தத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.