சென்னையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது .  இதுதொடர்பாக அக்கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தர்ராஜன் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் :-  தமிழகத்தில் சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் .  புலம்பெயரும் தொழிலாளர்கள் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தாததால் அத்தகைய தொழிலாளர்களின் பட்டியல் அரசிடம் இல்லை எனவே தான் எவ்வளவு தொழிலாளர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அரசு தோல்வியை சந்தித்துள்ளது .  தொழிலாளர்கள் வேலை செய்த இடங்களிலிருந்து  வெளியேற்றப்பட்டும் வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை காலி செய்துவிட்டு உணவு தங்க இடமின்றி சாலைகளில் குடும்பங்களோடு பரிதவிக்கின்றனர் .

சென்னையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு ரயில்களை இயக்கினாலும் உணவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது ,  ஆனால் இந்த ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை ,  சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ரயில்களில் மட்டுமே தொழிலாளர்களை அனுப்பி வைக்கிறது , இதன்படி நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே செல்கின்றனர் .  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள நிலையில் குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்குவது போதுமானதல்ல . மேலும் இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே  ரயிலில் இடம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது படிப்பறிவில்லாத தொழிலாளர்களுக்கு இணையதள வசதியை பயன்படுத்த முடியவில்லை ,  சொந்த ஊருக்கு செல்ல தனியார் போக்குவரத்து நிறுவனங்களை அணுகினால் பெரும் தொகையை கட்டணமாக கேட்பதால் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர் . 

எனவே தமிழக அரசு கூடுதலான ரயில் இயக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் ,  மாநில அரசும் பேருந்து வசதிகளை செய்து கொடுத்து தொழிலாளர்களை உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .  அதுவரையில் தொழிலாளர்களுக்கு தங்கும் இடத்தையும் உணவையும் அரசு வழங்க வேண்டும் உணவின்றி உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று ஏப்ரல் 22 அன்று முதலமைச்சருக்கு கடிதத்தில் கோரியிருந்தோம் ஆனால் இன்றுவரை தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கவில்லை .  மாநகராட்சி அதிகாரிகள் அதுபோன்று எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என்கிறார்கள் ,  ஆகவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய உணவு மற்றும் தங்கும் வசதியை செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.