இதுதொடர்பாக ஆர். முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலை அளிக்கிறது. காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். மணியரசன் கடிதத்தில் எழுப்பியுள்ள எட்டு வினாக்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இரண்டு கடிதங்களில் பதில் அனுப்பியுள்ளது. இப்பதில் கடிதங்கள் 100 சதவிகிதம் இந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது எதேச்சையாகவோ, இயல்பாகவோ நடந்தது அல்ல. மொழித் திணிப்பு வெறியுடன் எழுதப்பட்டுள்ள கடிதங்கள்.


தமிழ்நாட்டில் ஆங்கிலம் மட்டுமே அரசின் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும், இந்தி மொழி எந்த வகையிலும் பயன்படுத்தவதுதில்லை என்பதையும் மத்திய அரசும், நீர்வளத்துறையும் அறிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே யோகா மருத்துவம் தொடர்பான பயிற்சி முகாமில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்’ என ஓர் உயர் அதிகாரி உத்தரவிட்டதின் தொடர்ச்சியாகவே இது கருதப்பட வேண்டும். நீர் வளத்துறை இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளதன் மூலம் தனது மொழி எதேச்சதிகாரத்தை நிலை நாட்ட மத்திய அரசு முயல்வதை உறுதிப்படுத்துகிறது.


மத்திய அரசின் இந்தச் செயல் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது. கூட்டாட்சி கோட்பாடுகளை சீர்குலைப்பது, மொழி திணிப்பில் பலவந்தமாக ஈடுபடுவது. மத்திய அரசின் இந்த மொழி வெறி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, இந்தி மொழி திணிப்பது, சமஸ்கிருதமயமாக்குவது என ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீதும் மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க அனைவரும் முன் வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கேட்டுக் கொள்கிறோம்”. என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.