தேமுதிக பேசுவது கூட்டணி போலத் தெரியவில்லை. வியாபாராமாக தெரிகிறது என்று பிரேமலதாவையும் சுதிஷையும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் அவர்களுடைய முன்னாள் கூட்டணி கட்சிகள்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர் இடதுசாரிகள்.  ‘மக்கள் நலக் கூட்டணி’ என்ற பெயரில் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் இடதுசாரிகளும் பேசினார்கள். ஆனால், தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகள், தேமுதிகவை பிடிபிடியென பிடித்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் திமுக - அதிமுக கூட்டணியில் இடம் பிடிக்க தேமுதிக நடத்திய பேச்சுவார்த்தை வெட்ட வெளிச்சமானதால், அக்கட்சியை சிபிஐ, சிபிஎம் என இரு கட்சிகளுமே கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. 
தேமுதிகவின் கூட்டணி அரசியல் பற்றி சிபிஐ தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “ஒரு கட்சி என்றால் கொள்கை இருக்க வேண்டும். தேமுதிகவுக்கு என்ன கொள்கை இருக்கிறது? வகுப்புவாதத்தை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? வகுப்புவாதத்தை எதிர்ப்பதாக இருந்திருந்தால் அந்த அணியுடன் பேசியிருக்கக் கூடாது. ஒரு கொள்கையற்ற நிலையில் இருக்கிறது தேமுதிக. ஆளும் அதிமுக பலவீனமாக இருக்கிறது. அதனை பயன்படுத்தி அதிக இடங்களை பெறலாம் என்று நினைக்கிறது. கொள்கை இல்லையென்றால் எங்க வேண்டுமானாலும் பேசலாம். எந்தவித கொள்கையும் இல்லாமல் கூட்டணிக்கு நெருக்கியதால் தேமுதிக அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.   
இதேபோல சிபிஎம் தமிழகக் குழு செயலாளர் பாலகிருஷ்ணனும் தேமுதிகவை கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்திருக்கிறார். “திமுகவிடம் முதலில் பேசினார்கள். அதன் பிறகு அதிமுகவுடன் பேசுகிறார்கள். அங்கு ஒத்துவரவில்லை என்றதும், மீண்டும் திமுகவிடம் பேசுகிறார்கள். இது என்ன அரசியல் என்றே தெரியவில்லை. இங்கே என்ன வியாபாரமா நடக்கிறது? தேமுதிக பேசுவது கூட்டணி போல் தெரியவில்லை. வியாபாராமாக தெரிகிறது.

இதற்கு மேலேயும் இந்த கட்சியை அதிமுக சேர்த்துக்கொண்டால் அதிமுகவை என்னவென்று சொல்லுவது. 
தேமுதிக கடைசி நேரத்தில் நடந்து கொண்ட விதம் அரசியல் அநாகரீகமானது. அரசியலுக்கே இழுக்கு. இவையெல்லாம் விஜயகாந்துக்கு தெரியுமா? இல்லை விஜயகாந்தை வைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் வியாபாரமா? விஜயகாந்த் கவனத்தோடுதான் நடக்கிறது என்றால் அவரை பேட்டிக்கொடுக்க சொல்ல வேண்டியதுதானே? பிரேமலதாவும் சுதீஷும் ஏன் பேட்டி அளிக்கிறார்கள்.” என்றூ பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.