பெரியார் குறித்து சர்ச்சையாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் பதில் அளிக்க சென்னை போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துக்ளக் பொன் விழா கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினி, 1971ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ரஜினியின் இந்தப் பேச்சு தவறானது என்று பெரியாரிய இயக்கங்கள் கொந்தளித்தன. பெரியாரை அவதூறாகப் பேசிய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்தது. எனவே, ரஜினி மீது வழக்குப் பதிவு செய்ய கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கை மார்ச் 7ம் தேதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.