court order to attach vijaya mallaiya assets in bangalore
வங்கிகளில் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு கமிஷனருக்கு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.


இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளை கையகப்படுத்த வேண்டும் என டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பொருளாதார அமல்லாக்கத்துறை இயக்குனரகம் மனு செய்து இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத், விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றிய விபரங்கள் தொடர்பாக மே மாதம் 8-ம் தேதி கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
