பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனுவுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை குஷ்புவிற்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த 2012 மார்ச்சில் புதுப்பித்து பாஸ்போர்ட் வழங்கியது. 2022 வரை இது செல்லுபடியாகும். அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டதால் அவரது பாஸ்போர்ட் தாள்கள் நிரம்பி விட்டன.
தாள்கள் நிரம்பி விட்டால்  பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி சென்னை மண்டல அலுவலகத்தில் குஷ்பு விண்ணப்பித்தார் 
ஆனால், ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் குற்ற வழக்கை காரணம் காட்டி அந்தவிண்ணப்பத்தை நிராகரித்து, பாஸ்போர்ட்டை புதுபிக்க மறுத்து கடந்த டிசம்பர் 28ல்  பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது.
இதை எதிர்த்து நடிகை குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்தமனுவில், ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை  விதித்ததுள்ளது. 
மேலும் 2011ல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2012ல் தான் எனக்கு  பாஸ்போர்ட் புதுபித்து வாங்கினேன். இந்த உத்தரவால் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுப்பயணம் ரத்து செய்ய வேண்டி வந்தது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, என் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிடவேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.