துக்ளக்  பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி   எழுதியிள்ள தலையங்கத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக  அதன் சரித்திரத்தில் காணாத பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எப்படி வெற்றி என்பது ஒரு கட்சிக்கு மக்கள் அளிக்கும் பொறுப்போ, அதுபோல் தோல்வி என்பதும் ஒரு கட்சி திருந்த மக்கள் அதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு தான். அந்த வாய்ப்பை அ.தி.மு.க.வினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்..

அ.தி.மு.க. தோல்வி அடைய 4 முக்கிய காரணங்கள் இருக்கிறது. வெளிப்படையான ஊழல் ஆட்சி, நவகிரகங்கள் போன்று ஒருவரை ஒருவர் பார்க்காத திசையற்ற தலைமை, பிரிந்த தலைவர்களால் தேர்தல் பணியில் குழம்பிய தொண்டர்கள், பணத்தின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என்ற கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புற்றுநோய் போன்று புரையோடியுள்ள தவறான நம்பிக்கை இது தான் காரணம் என கடுமையான குற்றம்சாட்டியுள்ளார்.

தோல்வியுற்ற கட்சி தலைமை அதற்கான காரணத்தை ஆராய்ந்து, தவறுகளை திருத்தி குறைகளை நீக்கி, தொண்டர்களை ஊக்குவித்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற திட்டமிடுவது தான் அரசியலில் தவிர்க்க கூடாத நடவடிக்கை. ஆனால், எந்த ஆய்வோ, விவாதமோ இல்லாமல், தற்போது நடந்த தேர்தலில் தோல்வி அடையாத கட்சி போல, அதிமுக  நடந்து கொள்வது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இது அ.தி.மு.க.வுக்கோ, தமிழக அரசியலுக்கோ நல்லதல் என்றும் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்..

மேலும் பணத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது என்பதை திமுகவுக்கு 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் உணர்த்தியது. பணத்தால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது என்பதை அதிமுகவுக்கு 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் உணர்த்தியிருக்க வேண்டும். 

இருந்தும், ஆட்சியில் இருப்பதால் ஊழல்கள் செய்து ஏராளமான நிதி சேர்த்து விட்டால், 2021-ல் வெற்றி பெற்று விடலாம் என்று இப்போதும் அ.தி.மு.க. தலைமை நினைத்தால் அது துரதிர்ஷ்டமே என தெரிவித்துள்ளார்..

அ.தி.மு.க. தலைமைக்கு ஒன்று புரிய வேண்டும். கட்சி வலுவாக இருந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும். கட்சியால் ஆட்சி நிலைக்குமே தவிர, ஆட்சியால் கட்சி நிலைக்காது. எனவே வரும் 2 ஆண்டுகளில் தான் செய்த தவறுகளை அ.தி.மு.க. உணர்ந்து, வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, தலைவர்கள் ஒன்றுபட்டு கட்சியை வலுப்படுத்தி, நல்லாட்சி செய்து, இழந்த நற்பெயரை மீட்டெடுத்தால் மட்டுமே வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும். 

அதை செய்யவில்லை என்றால், என்ன நடக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை என குருமூர்த்தி அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.