தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித்தை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக அரசின் ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை மீது ஆளுநரிடம் திமுக 97 பக்கம் ஊழல் புகார்களை கொடுத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது என்றும், 2018 ஆம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சர்கள் மீது அளித்த ஊழல் புகார் மீது லஞ்ச  ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால், ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும், முதல்வர், துணை முதல்வர் சொத்துக்களை வாங்கி  குவித்தது குறித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார். அமைச்சர்கள் மீதான முதற்கட்ட ஊழல் பட்டியல் ஆளுநரிடம்  தரப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து திமுக தரப்பு  செய்திக்குறிப்பு  ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:- 

இன்று (22 12 2020) மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களை திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ் பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்து, முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் 97 பக்கம் ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

ஆளுநர் அவர்களிடம் கொடுத்துள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலில் சுருக்கம்: 

1.முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீது:  தனது நெருங்கிய உறவினர்களுக்கு  6,133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று, முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது. முதற்கட்டமாக 200. 21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது, குறித்து ஊழல் புகார். 

2.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது காக்னிசன்ட் கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு ஊழல் புகார்.

3.உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்ஈடி விளக்கு கொள்முதல் செய்து 175 கோடி ஊழல் புகார்.

4.மின்வாரியத் துறை அமைச்சர் திரு.பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது,போலி மின்சார கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார். 

5.உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்ற முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

6.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டது. புதுக்கோட்டையில் கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.

7.வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு.ஆர். பி உதயகுமார் மீது 1,950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.

8.மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் புகார்.

முதற்கட்டமாக முதலமைச்சர் திரு.பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கொடுத்து 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.