தற்போது டெல்லியில் நோய்த்தொற்று பரவல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், மாஸ்க் அணிவது போன்றவை குறித்த நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும் நமது பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவது சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்.
தமிழகத்தில் கொரோனா தோற்று மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்போரின் எண்ணிக்கை 0 ஆக குறைந்துள்ள நிலையில் டெல்லி போன்ற நகரங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் முகக் கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளது. அதிலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இந்நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வமின்றி இருந்து வருகின்றனர், மொத்ததில் தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறைந்து வருவதாகவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- கொரோனா என்பது தமிழகத்தில் குறைவாகவே பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் சில இடங்களில் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு அவசர சிகிச்சை பிரிவில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவில்லை. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 300 பேர் ஆக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல குருகிராமில் பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 98.7% அளவிற்கு செலுத்தப்பட்டுள்ளது, தற்போது கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகி உள்ளது.
இதனால் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். தற்போது வரை 48 லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது என்றார். இரண்டாவது தவணை தடுப்பூசி 1.37 லட்சம் பேர் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் நோய்த்தொற்று பரவல் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்தில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும், தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், மாஸ்க் அணிவது போன்றவை குறித்த நீதிமன்ற உத்தரவுகள் இருந்தாலும் நமது பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவது சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். வெயில் காலம் வந்துள்ளதால், பொதுமக்கள் அதிக நேரம் வெளியே நடமாடுவதை குறைக்கவேண்டும். தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். கொரோனாவை வைரசைப் பொறுத்தவரையில் மரபணுப் பிறழ்ச்சி தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. நிபுணர்கள் பலர் அது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சுகாதாரப் பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்வது நல்லது இது ஒட்டுமொத்த நோய்த்தடுப்பு ஆற்றலை உருவாக்கும். ஒவ்வொருவரும் 9 மாதம் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் மத்திய அரசின் வழிகாட்டுதல் கூறுகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பொறுத்தவரையில் 18 .90 லட்சம் பேர் போட தகுதியானவர்கள் என்ற நிலையியிருந்தும் 8.49 லட்சம் பேர் தான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். எந்த நேரத்திலும் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தடுப்புச் செலுத்துக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
